Monday, 30 December 2013

சாயிபாபா விரத விதிமுறைகள்


1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். 

2. இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். 

3. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

4. காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும்.  பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும். 

5. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 

6. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். 

7. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். 

8. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 

9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும். 

விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்

9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். 

சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். 

இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment