Thursday 30 January 2014

மேல்மலையனூர் கோவில் தீ மிதி விழா விரதமுறை

மேல்மலையனூர் கோவிலில் தேர்த் திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவும் நடத்தப்படும். இவ்விழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையாக வெகு சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். 


இந்த விரதமானது சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று மாலை அணிந்து கொள்வதிலிருந்து தொடங்குகின்றது. 

தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி துளசி மணிமாலை, உருத்திராட்ச மாலை சந்தனமாலை, பச்சைமணி மாலை இவைகளில் தங்களுக்குப் பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோயில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து மணிமாலையை அணிந்து கொள்ள வேண்டும். 

தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு `ஓம் சக்தி அங்காளம்மா' என உச்சரித்து வணங்க வேண்டும். இந்த விரதத்தின் போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும். இந்தத் தீமிதி விழாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பெருமளவில் பங்கு கொள்கின்றனர். 

ஆண்களுக்குக் கூறப்பட்ட அனைத்து விரத முறைகளையும் பெண்களும் கடைப்பிடிப்பர். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது. மாலை அணிந்த பின் ஆணாயினும், பெண்ணாயினும், சிறுவனாயினும், சிறுமியாயினும் அவர் `அங்காளம்மா' என்றே அழைக்கப்படுவர். 

மனத் தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும். பெண்கள் இந்த விரதம் இருந்து வரும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால் அன்று மாலையைக் கழற்றிவிட்டு மூன்று நாட்கள் கழித்து தலைக்கு மூன்று எண்ணெய் கூட்டி குளிப்பதுடன் மஞ்சள் நீறிலும் 

நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் மறுபடியும் மாலையை அணிந்து கொள்ள வேண்டும். இந்த பக்தர்கள் தீ மிதித் திருவிழாவன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவருவார்கள்.

Tuesday 28 January 2014

திருப்பாவை 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; 
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
  









பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!   

நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு. 

Tuesday 21 January 2014

விபூதி தத்துவம்

http://www.maalaimalar.com/2014/01/18150810/vibhuti-rules.html
சாதாரணமாக திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால் பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இதில் உள்ள தத்துவம் :

பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள் பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால் அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல் நம்மை பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இதுவரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் நீங்கி இறைவனே நம்மை எடுத்து ஆணீட்கொள்வார். ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

Monday 20 January 2014

முன்னோர் விரத வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள்

மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். 
ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை. இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள்.

அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

இதன் மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா?

உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும். நீங்கள் எந்த அளவுக்கு விரதமிருந்து பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும்.

பித்ரு வழிபாடு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது. நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குல தெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபாடுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும்.

இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும். இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.


Friday 10 January 2014

வைகுண்ட ஏகாதசி விரத முறை

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் லட்சுமி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும். 

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. 

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. 

குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். 

பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள். மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. 

மார்கழியின் தனிச்சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும், துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.

Wednesday 8 January 2014

தேவி வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே 
சிவே ஸர்வார்த்த சாதிகே 
சரண்யே த்ரயம்பகே கெளரி 
நாராயணி நமோஸ்துதே 
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் 
சக்திபூதே சனாதனி குணாச்ரயே 
குணமயே நாராயணி நமோஸ்துதே 
சரணாகத தீனார்த்த பரித்ராண 
பராயணே ஸர்வஸ்யார்த்தி ஹரே 
தேவி நாராயணி நமோஸ்துதே



Monday 6 January 2014

மாத ஏகாதசி விரதமும், பலன்களும்

ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்களை, நலன்களை தரும் என கூறப்படுகிறது. எந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? 


சித்திரை ஏகாதசி: விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.

வைகாசி: கைலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன்.

ஆனி: சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

ஆடி: ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம்.

ஆவணி: குழந்தை பாக்கியம் கிடைக்கும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தைகளின் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மலரும்.

புரட்டாசி: நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

ஐப்பசி: சகல வளங்களும் உண்டாகும்.

கார்த்திகை: மகிழ்ச்சியான வாழ்வு.

தை: பித்ரு சாபங்கள் நீங்கி முன்னோர் அருளாசி கிடைக்கும்.

மாசி: சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

பங்குனி: தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.

Friday 3 January 2014

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிக்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்' அனுமனைப் பற்றிய கம்பராமாயண வரிகள் இவை. 

பஞ்சபூதங்களை வென்றவர் 'பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கை சென்றவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமா தேவியின் மகளான சீதையைக் கண்டவன், ராவண தேசத்தில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பினை வைத்தவன், அவன் நம் தேவைகளை அளித்து நம்மைக் காக்கட்டும்'- என்பது மேற்கண்ட வரிகளின் பொருளாகும். பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமையாகும். 

சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு 'சுந்தர காண்டம்' என்று பெயர். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு. 

சஞ்சீவி மலையை: 

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி இங்கு காணலாம். சீதாதேவியை மீட்பதற்காக ராம- ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. 

யுத்தத்தின் போது மாயப்போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள். அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. 

காற்றை விட வேகமாக செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டுவரும்படி ஜாம்பவான் பணித்தார். ராமபிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப்புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார். 

பாதம்பட்ட திருத்தலம் : 

அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது மாலை வேளையானது. அதனால் நித்திய கர்மாவாகிய, சந்தியா வந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்று விட்டார். 

முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாசராஜ தீர்த்தன் என்பவர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்த மலை ஆஞ்சநேயருக்கு, திருமங்கை ஆழ்வார் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று இந்த திருத்தலத்தின் தல வரலாறு விரிகிறது.' '' 

வீர ஆஞ்சநேயர் கோவில்

மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். 

எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார். வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார். 

கோவில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்றுக் கருதி பிடிக்க செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் 'பரிவேட்டை' தலமாகவும் இத்தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீரஆஞ்ச நேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரிமலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். 

அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்ச நேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. 

மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும். 

இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராமன் நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன. 

சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருக காட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.


Thursday 2 January 2014

சிவனுக்கு உகந்த விரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெறலாம்.

1. சோமவார விரதம்  -  இந்த விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது. சிவனுக்கு உகந்த விரதங்களில் சோமவார விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..

2. உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து மாதம் தோறும் பின்பற்றுவது.

3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது

4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது. இந்த மற்ற சிவன் விரதங்களை விட மிகவும் முக்கியமானது.

5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது

7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

http://www.maalaimalar.com/2014/01/02143309/best-viratham-for-lord-shiva.html