Friday, 3 January 2014

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிக்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்' அனுமனைப் பற்றிய கம்பராமாயண வரிகள் இவை. 

பஞ்சபூதங்களை வென்றவர் 'பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கை சென்றவன், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமா தேவியின் மகளான சீதையைக் கண்டவன், ராவண தேசத்தில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பினை வைத்தவன், அவன் நம் தேவைகளை அளித்து நம்மைக் காக்கட்டும்'- என்பது மேற்கண்ட வரிகளின் பொருளாகும். பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமையாகும். 

சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு 'சுந்தர காண்டம்' என்று பெயர். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு. 

சஞ்சீவி மலையை: 

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி இங்கு காணலாம். சீதாதேவியை மீட்பதற்காக ராம- ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. 

யுத்தத்தின் போது மாயப்போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள். அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. 

காற்றை விட வேகமாக செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டுவரும்படி ஜாம்பவான் பணித்தார். ராமபிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப்புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார். 

பாதம்பட்ட திருத்தலம் : 

அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது மாலை வேளையானது. அதனால் நித்திய கர்மாவாகிய, சந்தியா வந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்று விட்டார். 

முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாசராஜ தீர்த்தன் என்பவர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்த மலை ஆஞ்சநேயருக்கு, திருமங்கை ஆழ்வார் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று இந்த திருத்தலத்தின் தல வரலாறு விரிகிறது.' '' 

வீர ஆஞ்சநேயர் கோவில்

மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். 

எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார். வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார். 

கோவில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்றுக் கருதி பிடிக்க செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் 'பரிவேட்டை' தலமாகவும் இத்தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீரஆஞ்ச நேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரிமலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். 

அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்ச நேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. 

மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும். 

இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராமன் நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன. 

சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருக காட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.


1 comment:

  1. Sands Casino | 150 Free Spins - Sydney and the Pacific
    This is the Sands Casino 바카라 사이트 we offer, with 150 free spins to play 샌즈카지노 slots หารายได้เสริม and live casino games including slots, table games and video poker games.

    ReplyDelete