Friday 10 January 2014

வைகுண்ட ஏகாதசி விரத முறை

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் லட்சுமி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும். 

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. 

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. 

குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். 

பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள். மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. 

மார்கழியின் தனிச்சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும், துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment