Tuesday 31 December 2013

புதன் துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும் 
புதபகவானே பொன்னடி போற்றி 
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே 
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி 

மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம் 
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் 
திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க 
வல்லான் புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி. 

புண்ணிய திருமக புதனே போற்றி 
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி 
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி 


Monday 30 December 2013

சாயிபாபா விரத விதிமுறைகள்


1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். 

2. இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். 

3. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

4. காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும்.  பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும். 

5. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 

6. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். 

7. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். 

8. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 

9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும். 

விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்

9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். 

சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். 

இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

Friday 27 December 2013

சரஸ்வதி மந்திரம்


கல்வி என்றாலே சரஸ்வதி தேவிதான், நம் மனக்கண் முன் வருவாள். கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு, ஞானத்தின் வெளிப்பாடான வெண் தாமரை மீது அமர்ந்து கொண்டு மென்மையான தோற்றம் கொண்ட ஒரு சாத்வீக தேவதை அம்சமே சரஸ்வதிதேவி.

அந்த சரஸ்வதி தேவியை வழிபட வார நாட்களில் உகந்தது புதன்கிழமையாகும். அதனால் ஒரு வளர்பிறை புதன்கிழமை நாளில் மாணவ மணிகள் அதிகாலையிலேயே குளித்து முடித்து சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பு வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று நெய் தீபமேற்றி கீழ்கண்ட மந்திரத்தை 24 முறை அல்லது 48 முறை கூறி வர வேண்டும்.

'ஓம் ஐம் ஸாரஸ்வத்யை நமஹ'

இந்த மந்திரத்தைத் தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 48 முறை சொல்லி வருவதால் பாடங்களில் கிரகிப்புத் திறன் நிச்சயமாக கூடி வரும். 

Thursday 26 December 2013

அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் நமக்கு ஏற்படும். நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். துன்பம் விலகும் இன்பம் கிட்டும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஆஞ்சநேயரை ஸ்ரீராம நாமத்தால் வழிபடுவதோடு வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வெண்ணை சாத்தி வழிபட வேண்டும். அனுமன் வாலில் பொட்டு வைக்க வேண்டும். 

மார்கழி மாதம் வளர்பிறை தியோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து "ஓம் நமோ பகவதேவ வாயு நந்தனாய்'' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தளம், பூ மேலும் மற்ற பூஜைப் பொருட்களால் பூஜை செய்ய வேண்டும். 

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி வெற்றிலைப் பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து ஏழைகளுக்குக் கொடுக்கலாம். மேலும் அன்னதானம் செய்யலாம். ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். 

அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும். கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். 

இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம். காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் கொடுக்கலாம். பகல் உணவாகக் கிழங்கு, காய்கறிகளைச் சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத் திரங்கள் சுலோகங்கள் சொல்லி வணங்க வேண்டும். 

ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன், மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம் பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறுவகையான பலன்களும் நிரந்தரமாகக் கிடைக்கப் பெறுவர். 

அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர் களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம். வெளியில் செல்லும்போது ஆஞ்சநேயரின் மூல மந்திரத்தைத் தியானம் செய்து போனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

13 முடிச்சுள்ள அனுமன் விரதக் கயிற்றை கழுத்திலோ அல்லது வலது கையிலோ கட்டிக் கொண்டால் நமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Tuesday 24 December 2013

சந்திரன் துதி

அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது 
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும் 
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு 
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி! 

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் 
திங்களே போற்றி திருவரும் புரிவாய் 
சந்திரா போற்றி சற்குணா போற்றி 
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி 

பிங்கலன் அணிந்த திங்களே போற்றி 
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி 
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி 
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி





Monday 23 December 2013

திருப்பாவை 30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
 
பொருள்....கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சியர் அடைந்து வணங்கிப் பாடினர். திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் அருளிச் செய்தார்.
 
சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்! என்று ஸ்ரீஆண்டாள் பலச்ருதியாக இந்த மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.

Friday 20 December 2013

கடன் தொல்லை தீர்க்கும் மந்திரம்

தீபங்களை மேற்கு நோக்கி ஏற்றி வைத்து, பானகம் நைவேத்தியம் படைத்து, புஷ்ப, தூப, தீப, வழிபாடுகள் செய்து இந்த ஸ்தோத்திரத்தை 24 முறை தினமும் மாலையில் அல்லது இரவில் முடிந்த நேரத்தில் சொல்லி வரவும். இதை வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே செய்து வரவும். இதுபோன்ற நேரத்தில் அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டியது அவசியம். 

ஸ்தோத்திரம் 

'தேவதா கார்ய ஸித்யர்த்தம் 
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

லக்ஷ்மியாலிங்கித வாமாங்கம் 

பக்தானாம் வர தாயகம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ஆந்த்ர மாலா தரம் சங்கம் 
சக்ராப்ஜாயுத தாரிணம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ரிண முக்தயே! 

ஸ்மரணாத் ஸர்வ பாபக்ஞம் 
கத்ரூஜ விஷ நாசனம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ஸிம்ஹ நாதேந மஹதா 
திக் தந்தி பய நாஸனம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் 
தைத்யேச்வர விதாரிணம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

க்ரூரக்ரஹை பீடிதாநாம் 
பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

வேத வேதாந்த யக்ஞேஸம் 
ப்ரஹ்மருத்ராதி வந்திதம் 
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ரிண முக்தயே! 

ய இதம் படதே நித்யம் 
ரிண விமோசன ஸம்க்ஞிதம் 
அந்ருணி ஜாயதே சத்யோ 
தனம் ஸீக்ரமவாப்நுயாத்'   

Thursday 19 December 2013

நல்லன யாவும் கிட்டும் நந்தி தரிசனம்!

நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள். நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை. நலமும் வளமும் பெற சிறப்பான சில நந்திகளை தரிசிப்போம். 


தஞ்சாவூர் நந்தி: நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும். அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர். 

மதுரை நந்தி: மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது. இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம், திருநெல்வேலி, சுசீந்திரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை, மாக்காளைகள் எனப்படுகின்றன. 

திருவண்ணாமலை நந்தி: அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி ! 

சாமுண்டிமலை நந்தி: மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. 

வைக்கம் நந்தி: கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி. வெளிப்பிராகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர். 

கங்கைகொண்ட சோழபுரம் நந்தி: தஞ்சைப் பெரிய கோயிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோயிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடபம்.

Wednesday 18 December 2013

வேலை கிடைக்க லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரம்

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி 
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்'' 

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். 


Tuesday 17 December 2013

பாவங்கள் போக்கும் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு சிவவழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோஷம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

பிரதோஷ காலமென்பது மாலை 4 மணி 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், சனிக்கிழமைப் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படும். பிரதோஷ காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்பபோம். 

அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விஷம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விஷம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். 

ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. 

அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோஷத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். 

மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிஷப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். 

இது பிரதோஷ வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 6 பிரதோஷ காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பொர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோஷமாகும். இவ்வாறு பிரதோஷ கால வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் பாவங்கள், தோஷங்கள் தீரும் என்பது உண்மை.

Monday 16 December 2013

மகத்துவம் மிகுந்த மார்கழி மாதம்!

மாதங்கள் எல்லாவற்றிலும் மார்கழிமாதம் சிறந்தது என்று இந்து மதம் கூறுகின்றது. மார்கழியை ஜோதிட சாஸ்திரம் தனூர் மாதம் என்கிறது. மார்க்கசிரம் என்பது மிருகசீரிடம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். சந்திரன் மிருகசீரிட நட்சத்திரத்தில், கலைகள் பதினாறும் பூர்த்தியாகி பவுர்ணமி ஆனதால் மார்கழி எனவும், சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் தனுர் மாதம் எனவும் கூறப்படுகிறது.

மார்கழி மாத நாட்கள் முழுவதும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சகல சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.

மக்கள் யாவரும் அதிகாலையில் துயில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள்நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.


மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார்

Friday 13 December 2013

கல்வி தரும் விரதம்

பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் இல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து காலையும் ,மதியமும் சாப்பிடாமல் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்குசென்று நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோவில் நுழைவு வாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். முடியாதவர்கள் மற்றவர்களைப் பாட சொல்லி கேட்டாலே போதுமானது. இரவில் பழம்அல்லது மிதமான  உணவுகளையும் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.


பவுர்ணமி விரதம் அறிவையும், அழகையும் விருத்தி செய்யும். குழந்தைகள் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் கல்வி நன்றாக வரும். குழந்தைகளக்கு பழங்கள் அல்லது சாத்வீகமான உணவுகளை சாப்பிட்டுக் கொடுக்கலாம்.

Wednesday 11 December 2013

செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை


இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு:

1.  வெண்கடுகு  - 250 கிராம்
2.  நாய்க்கடுகு  - 250 கிராம்
3.  மருதாணி விதை  - 250 கிராம்
4.  சாம்பிராணி  - 250 கிராம்
5.  அருகம்புல் பொடி  - 50 கிராம்
6.  வில்வ இலை பொடி  - 50 கிராம்
7.  வேப்ப இலை பொடி  - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.   மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.

ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



திருமண தடை விலகச் செய்யும் மந்திரம்

'ஹிமகுந்த ம்ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வ ஸாஸ்த்ரப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்!!'  

இதைச் சொல்லி முடித்து பூஜையை நிறைவு செய்து பிரசாதத்தை மட்டும் உண்டு, இரவில் விரதமிருந்து காலையில் விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த விரதத்தை செய்து வந்தால் நிச்சயமாக தாமதத் திருமணத்தடைகள் நீங்கி, நல்ல இல்லறத் துணை அமையும்.


தம்மால் செய்ய இயலாத வளையல்கள் ஆகியவற்றையும் சேர்த்து மனமுவந்து தானமாக வழங்க வேண்டும். இதனை முழு மனதுடன் இறைவனது அருள்வாய்ப்பாக எண்ணி விளம்பரங்களின்றி செய்வதே பூரணப் பலன் தரும்.

Tuesday 10 December 2013

தை அமாவாசை விரதம்

தை அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை நினைத்து அமாவாசை நாட்களில் விரதம்கடைப்பிடிப்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடிஅமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளை ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையில் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

கடல் கூடும் கன்னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூடுதலாக இருக்கும் ராமேசுவரத்தில் புகழ் பெற்ற ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னிதீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.

கோவில் சிறப்பு அபிஷேகஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.

பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.


Wednesday 20 November 2013

சோமவார விரதம் தோன்றிய வரலாறு

சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான்.


தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான, கார்த்திகை, ரோகிணி, மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, 

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். 

அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. 

தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின்அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், 

அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் 

வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.