Tuesday 17 December 2013

பாவங்கள் போக்கும் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு சிவவழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோஷம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

பிரதோஷ காலமென்பது மாலை 4 மணி 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், சனிக்கிழமைப் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படும். பிரதோஷ காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்பபோம். 

அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விஷம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விஷம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். 

ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. 

அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோஷத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். 

மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிஷப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். 

இது பிரதோஷ வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 6 பிரதோஷ காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பொர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோஷமாகும். இவ்வாறு பிரதோஷ கால வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் பாவங்கள், தோஷங்கள் தீரும் என்பது உண்மை.

No comments:

Post a Comment