Monday, 23 December 2013

திருப்பாவை 30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
 
பொருள்....கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சியர் அடைந்து வணங்கிப் பாடினர். திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் அருளிச் செய்தார்.
 
சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்! என்று ஸ்ரீஆண்டாள் பலச்ருதியாக இந்த மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.

No comments:

Post a Comment