Thursday 26 December 2013

அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் நமக்கு ஏற்படும். நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். துன்பம் விலகும் இன்பம் கிட்டும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஆஞ்சநேயரை ஸ்ரீராம நாமத்தால் வழிபடுவதோடு வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வெண்ணை சாத்தி வழிபட வேண்டும். அனுமன் வாலில் பொட்டு வைக்க வேண்டும். 

மார்கழி மாதம் வளர்பிறை தியோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து "ஓம் நமோ பகவதேவ வாயு நந்தனாய்'' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தளம், பூ மேலும் மற்ற பூஜைப் பொருட்களால் பூஜை செய்ய வேண்டும். 

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி வெற்றிலைப் பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து ஏழைகளுக்குக் கொடுக்கலாம். மேலும் அன்னதானம் செய்யலாம். ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். 

அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும். கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். 

இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம். காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் கொடுக்கலாம். பகல் உணவாகக் கிழங்கு, காய்கறிகளைச் சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத் திரங்கள் சுலோகங்கள் சொல்லி வணங்க வேண்டும். 

ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன், மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம் பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறுவகையான பலன்களும் நிரந்தரமாகக் கிடைக்கப் பெறுவர். 

அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர் களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம். வெளியில் செல்லும்போது ஆஞ்சநேயரின் மூல மந்திரத்தைத் தியானம் செய்து போனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

13 முடிச்சுள்ள அனுமன் விரதக் கயிற்றை கழுத்திலோ அல்லது வலது கையிலோ கட்டிக் கொண்டால் நமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

No comments:

Post a Comment