Thursday 13 February 2014

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்காட்லாந்து இசைக் கல்லூரியின் கவுரவ டாக்டர் பட்டம்

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.

இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்குவதாக ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அறிவித்தது.

தனது கே.எம். இசைப் பள்ளி மாணவர்களுடன் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்த கவுரவ பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் நன்றியுரை ஆற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், '1845-லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத்துறை கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனம் அளித்துள்ள இந்த கவுரவ பட்டம் தனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது' என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment