Thursday 13 March 2014

தூத்துக்குடியில் ஜெயலலிதா நாளை பிரசாரம்

தூத்துக்குடி, மார்ச். 14–

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 24–ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆதரித்து கடந்த 3–ந் தேதி முதல் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடியில் நாளை (15–ந் தேதி) பிரசாரம் செய்கிறார்.
இதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகரில் உள்ள சிவசக்தி நகர் மைதானத்தில் பாராளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை உருவாக்கப்பட்டுள்ளது. மேடையின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை பிற்பகல் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வருகிறார். பின்பு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பேசுகிறார்.
கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அமர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வசதியாக ஆயிரக்கணக்கான சேர்கள் போடப்பட்டுள்ளன. மேடைக்கு முன்புறம் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அமரவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார்சிங் தலைமையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வருபவர்களை கண்காணிக்க மேடைக்கு அருகே சுழலும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்துள்ள முதல்–அமைச்சரின் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்வதை முன்னிட்டு தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் அ.தி.மு.க. கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment